ஏழாம்-திருமுறை

077 பரவும் பரிசொன் றறியேன்நான்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

பரவும் பரிசொன் றறியேன்நான்

  பண்டே உம்மைப் பயிலாதேன்

இரவும் பகலும் நினைந்தாலும்

  எய்த நினைய மாட்டேன்நான்

கரவில் அருவி கமுகுண்ணத்

  தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை

அரவந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  1 

 

 

எங்கே போவே னாயிடினும்

  அங்கே வந்தென் மனத்தீராய்ச்

சங்கை யொன்றும் இன்றியே

  தலைநாள் கடைநாள் ஒக்கவே

கங்கை சடைமேற் கரந்தானே

  கலைமான் மறியுங் கனல்மழுவுந்

தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  2 

 

 

மருவிப் பிரிய மாட்டேன்நான்

  வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்

பருவி விச்சி மலைச்சாரற்

  பட்டை கொண்டு பகடாடிக்

குருவி ஓப்பிக் கிளிகடிவார்

  குழன்மேல் மாலை கொண்டோ ட்டந்

தரவந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  3 

 

 

பழகா நின்று பணிசெய்வார்

  பெற்ற பயனொன் றறிகிலேன்

இகழா துமக்காட் பட்டோர்க்கு

  வேக படமொன் றரைச்சாத்தி

குழகா வாழைக் குலைத்தெங்கு

  கொணர்ந்து கரைமேல் எறியவே

அழகார் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  4 

 

 

பிழைத்த பிழையொன் றறியேன்நான்

  பிழையைத் தீரப் பணியாயே

மழைக்கண் நல்லார் குடைந்தாட

  மலையும் நிலனுங் கொள்ளாமைக்

கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்

  கழனி மண்டிக் கையேறி

அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  5 

 

 

கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன்

  றுடையாய் விடையாய் கையினால்

மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்

  முன்னீ பின்னீ முதல்வன்நீ

வார்க்கொள் அருவி பலவாரி

  மணியும் முத்தும் பொன்னுங்கொண்

டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  6 

 

 

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்

  பற்றி உலகம் பலிதேர்வாய்

சிலைக்கொள் கணையால் எயிலெய்த

  செங்கண் விடையாய் தீர்த்தன்நீ

மலைக்கொள் ளருவி பலவாரி

  மணியும் முத்தும் பொன்னுங்கொண்

டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  7 

 

 

போழும் மதியும் புனக்கொன்றைப்

  புனல்சேர் சென்னிப் புண்ணியா

சூழும் அரவச் சுடர்ச்சோதீ

  உன்னைத் தொழுவார் துயர்போக

வாழு மவர்கள் அங்கங்கே

  வைத்த சிந்தை உய்த்தாட்ட

ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  8 

 

 

கதிர்கொள் பசியே ஒத்தேநான்

  கண்டேன் உம்மைக் காணாதேன்

எதிர்த்து நீந்த மாட்டேன்நான்

  எம்மான் றம்மான் றம்மானே

விதிர்த்து மேகம் மழைபொழிய

  வெள்ளம் பரந்து நுரைசிதறி

அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  9 

 

 

கூசி அடியார் இருந்தாலுங்

  குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்

தேச வேந்தன் திருமாலும்

  மலர்மேல் அயனுங் காண்கிலாத்

தேச மெங்குந் தெளித்தாடத்

  தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்

வாசந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  10 

 

 

கூடி அடியார் இருந்தாலுங்

  குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்

ஊடி இருந்தும் உணர்கிலேன்

  உம்மைத் தொண்டன் ஊரனேன்

தேடி யெங்குங் காண்கிலேன்

  திருவா ரூரே சிந்திப்பன்

ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்

  தையா றுடைய அடிகளோ.  11 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details
சப்தகந்தலிங்க சித்தர்
View Details
திருவாதவூரருக்கு உபதேசித்தல்
View Details