ஏழாம்-திருமுறை

088 நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : வீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

 

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்

  நான்மறைக்கிட மாயவேள்வியுள்

செம்பொ னேர்மட வாரணி

  பெற்ற திருமிழலை

உம்ப ரார்தொழு தேத்த மாமலை

  யாளடும் முடனே உறைவிடம்

அம்பொன் வீழிகொண் டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  1 

 

 

விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச் சுருள்ஒன்

  றிட்டுவிட்ட காதினீர் என்று

திடங்கொள் சிந்தையி னார்கலி

  காக்குந் திருமிழலை

மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை

  வந்திழிச்சிய வான நாட்டையும்

அடங்கல் வீழி கொண் டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  2 

 

 

ஊனை உற்றுயிர் ஆயினீர் ஒளிமூன்று

  மாய்த்தெளி நீரோ டானஞ்சின்

தேனை ஆட்டுகந்தீர்செழு

  மாடத் திருமிழலை

மானை மேவிய கையினீர்மழுஏந்தினீர்

  மங்கை பாகத் தீர்விண்ணில்

ஆன வீழிகொண்டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  3 

 

 

பந்தம் வீடிவை பண்ணினீர் படிறீர்

  மதிப்பிதிர்க் கண்ணி யீரென்று

சிந்தைசெய் திருக்குஞ்செங்கை

  யாளர் திருமிழலை

வந்துநாடகம் வான நாடியர்

  ஆட மாலயன் ஏத்த நாடொறும்

அந்தண் வீழிகொண்டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  4 

 

 

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்

  ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்

திரிசெய் நான்மறை யோர்சிறந்

  தேத்துந் திருமிழலைப்

பரிசி னாலடி போற்றும் பத்தர்கள்

  பாடி ஆடப் பரிந்து நல்கினீர்

அரிய வீழிகொண் டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  5 

 

 

எறிந்தசண்டி இடந்த கண்ணப்பன்

  ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்

செறிந்த பூம்பொழில் தேன்துளி

  வீசுந் திருமிழலை

நிறைந்த அந்தணர் நித்தம் நாடொறும்

  நேசத் தாலுமைப் பூசிக் கும்மிடம்

அறிந்து வீழிகொண் டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  6 

 

 

பணிந்த பார்த்தன் பகீரதன்பல பத்தர்

  சித்தர்க்குப் பண்டு நல்கினீர்

திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்

  மல்கு திருமிழலை

தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்

  அந்தி வானிடு பூச்சிறப்பவை

அணிந்து வீழிகொண் டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  7 

 

 

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்

  பார்த்துணுஞ் சுற்ற மாயினீர்

தெரிந்த நான்மறை யோர்க்கிடம்

  ஆய திருமிழலை

இருந்து நீர்தமிழோ டிசைகேட்கும் மிச்சையாற்

  காசு நித்தல்நல்கினீர்

அருந்தண் வீழிகொண் டீர்அடி

  யேற்கும் அருளுதிரே.  8 

 

 

தூய நீரமு தாய வாறது சொல்லு

  கென்றுமைக் கேட்கச் சொல்லினீர்

தீய ராக் குலை யாளர்

  செழுமாடத் திருமிழலை

மேய நீர்பலி ஏற்றதென் னென்றுவிண்

  ணப்பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருள்

ஆய வீழிகொண்டீர் அடி

  யேற்கும் அருளுதிரே.  9 

 

 

வேத வேதியர் வேத நீதியர்

  ஓது வார்விரி நீர்மிழலையுள்

ஆதி வீழிகொண்டீர்அடி

  யேற்கும் அருளுகென்று

நாத கீதம்வண் டோதுவார்பொழில்

  நாவலூரன்வன் றொண்டன் நற்றமிழ்

பாதம் ஓதவல் லார்பர

  னோடு கூடுவரே.  10 

 

திருச்சிற்றம்பலம்