ஏழாம்-திருமுறை

091 பாட்டும் பாடிப் பரவித்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : ஒற்றியூர்

திருச்சிற்றம்பலம்

 

பாட்டும் பாடிப்

  பரவித் திரிவார்

ஈட்டும் வினைகள்

  தீர்ப்பார் கோயில்

காட்டுங் கலமுந்

  திமிலுங் கரைக்கே

ஓட்டுந் திரைவாய்

  ஒற்றி யூரே.  1 

 

 

பந்துங் கிளியும்

  பயிலும் பாவை

சிந்தை கவர்வார்

  செந்தீ வண்ணர்

எந்தம் அடிகள்

  இறைவர்க் கிடம்போல்

உந்துந் திரைவாய்

  ஒற்றி யூரே.  2 

 

 

பவளக் கனிவாய்ப்

  பாவை பங்கன்

கவளக் களிற்றின்

  உரிவை போர்த்தான்

தவழும் மதிசேர்

  சடையாற் கிடம்போல்

உகளுந் திரைவாய்

  ஒற்றி யூரே.  3 

 

 

என்ன தெழிலும்

  நிறையுங் கவர்வான்

புன்னை மலரும்

  புறவிற் றிகழுந்

தன்னை முன்னம்

  நினைக்கத் தருவான்

உன்னப் படுவான்

  ஒற்றி யூரே.  4 

 

 

பணங்கொள் அரவம்

  பற்றிப் பரமன்

கணங்கள் சூழக்

  கபாலம் ஏந்தி

வணங்கும் இடைமென்

  மடவார் இட்ட

உணங்கல் கவர்வான்

  ஒற்றி யூரே.  5 

 

 

படையார் மழுவன்

  பால்வெண் ணீற்றன்

விடையார் கொடியன்

  வேத நாவன்

அடைவார் வினைகள்

  அறுப்பான் என்னை

உடையான் உறையும்

  ஒற்றி யூரே.  6 

 

 

சென்ற புரங்கள்

  தீயில் வேவ

வென்ற விகிர்தன்

  வினையை வீட்ட

நன்று நல்ல

  நாதன் நரையே

றொன்றை உடையான்

  ஒற்றி யூரே.  7 

 

 

கலவ மயில்போல்

  வளைக்கை நல்லார்

பலரும் பரவும்

  பவளப் படியான்

உலகின் உள்ளார்

  வினைகள் தீர்ப்பான்

உலவுந் திரைவாய்

  ஒற்றி யூரே.  8 

 

 

பற்றி வரையை

  எடுத்த அரக்கன்

இற்று முரிய

  விரலால் அடர்த்தார்

எற்றும் வினைகள்

  தீர்ப்பார் ஓதம்

ஒற்றுந் திரைவாய்

  ஒற்றி யூரே.  9 

 

 

ஒற்றி யூரும்

  அரவும் பிறையும்

பற்றி யூரும்

  பவளச் சடையான்

ஒற்றி யூர்மேல்

  ஊரன் உரைத்த

கற்றுப் பாடக்

  கழியும் வினையே.  10 

 

திருச்சிற்றம்பலம்