ஏழாம்-திருமுறை

092 எற்றான் மறக்கேன்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : அவிநாசி

திருச்சிற்றம்பலம்

 

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்

  எம்பெரு மானையே

உற்றாய் என்றுன்னையே உள்குகின்

  றேன்உணர்ந் துள்ளத்தால்

புற்றா டரவா புக்கொளி

  யூரவி நாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதி

  யேபர மேட்டியே.  1 

 

 

வழிபோவார் தம்மோடும் வந்துடன்

  கூடிய மாணிநீ

ஒழிவ தழகோ சொல்லாய்

  அருளோங்கு சடையானே

பொழிலாருஞ் சோலைப் புக்கொளி

  யூரிற் குளத்திடை

இழியாக் குளித்த மாணிஎன்

  னைக்கிறி செய்ததே.  2 

 

 

எங்கேனும் போகினும் எம்பெரு

  மானை நினைந்தக்கால்

கொங்கே புகினுங் கூறைகொண்

  டாறலைப் பார்இலை

பொங்கா டரவா புக்கொளி

  யூரவி நாசியே

எங்கோ னேஉனை வேண்டிக்கொள்

  வேன்பிற வாமையே.  3 

 

 

உரைப்பார் உரைஉகந் துள்கவல்

  லார்தங்கள் உச்சியாய்

அரைக்கா டரவா ஆதியும்

  அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளி

  யூரவி நாசியே

கரைக்கால் முதலையைப் பிள்ளை

  தரச்சொல்லு காலனையே.  4 

 

 

அரங்காவ தெல்லா மாயிடு

  காடது அன்றியும்

சரங்கோலை வாங்கி வரிசிலை

  நாணியிற் சந்தித்துப்

புரங்கோட எய்தாய் புக்கொளி

  யூரவி நாசியே

குரங்காடு சோலைக் கோயில்கொண்

  டகுழைக் காதனே.  5 

 

 

நாத்தா னும்உனைப் பாடல்அன்

  றிநவி லாதெனாச்

சோத்தென்று தேவர் தொழநின்ற

  சுந்தரச் சோதியாய்

பூத்தாழ் சடையாய் புக்கொளி

  யூரவி நாசியே

கூத்தா உனக்குநான் ஆட்பட்ட

  குற்றமுங் குற்றமே.  6 

 

 

மந்தி கடுவனுக் குண்பழம்

  நாடி மலைப்புறம்

சந்திகள் தோறுஞ்சலபுட்பம்

  இட்டு வழிபடப்

புந்தி உறைவாய் புக்கொளி

  யூரவி நாசியே

நந்தி உனைவேண்டிக் கொள்வேன்

  நரகம் புகாமையே.  7 

 

 

பேணா தொழிந்தேன் உன்னைஅல்

  லாற்பிற தேவரைக்

காணா தொழிந்தேன் காட்டுதி

  யேலின்னங் காண்பன்நான்

பூணாண் அரவா புக்கொளி

  யூரவி நாசியே

காணாத கண்கள் காட்டவல்

  லகறைக் கண்டனே.  8 

 

 

நள்ளாறு தெள்ளா றரத்துறை

  வாய்எங்கள் நம்பனே

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்

  தோலை விரும்பினாய்

புள்ளேறு சோலைப் புக்கொளி

  யூரிற் குளத்திடை

உள்ளாடப் புக்க மாணியென்

  னைக்கிறி செய்ததே.  9 

 

 

நீரேற ஏறுநிமிர் புன்சடை

  நின்மல மூர்த்தியைப்

போரேற தேறியைப் புக்கொளி

  யூரவி நாசியைக்

காரேறு கண்டனைத் தொண்டன்

  ஆரூரன் கருதிய

சீரேறு பாடல்கள் செப்பவல்

  லார்க்கில்லை துன்பமே.  10 

 

திருச்சிற்றம்பலம்