எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

012 சேட்படை

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர்

பூமென் தழையுமப் போதுங்கொள் ளீர்தமி யேன்புலம்ப

ஆமென் றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராங்

காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. 1

 

 

ஆரத் தழையராப் பூண்டம் பலத்தன லாடியன்பர்க்

காரத் தழையன் பருளிநின் றோன்சென்ற மாமலயத்

தாரத் தழையண்ணல் தந்தா லிவையவ ளல்குற்கண்டால்

ஆரத் தழைகொடு வந்தா ரெனவரும் ஐயுறவே. 2

 

 

முன்றகர்த் தெல்லா விமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்

சென்றகத் தில்லா வகைசிதைத் தோன்றிருந் தம்பலவன்

குன்றகத் தில்லாத் தழையண் ணறந்தாற் கொடிச்சியருக்

கின்றகத் தில்லாப் பழிவந்து மூடுமென் றெள்குதுமே. 3

 

 

யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர்

ஏழா யெழுபொழி லாயிருந் தோன்நின்ற தில்லையன்ன

சூழார் குழலெழிற் றொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்

தாழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே. 4

 

 

எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண்

டழல்வா யவிரொளி யம்பலத் தாடுமஞ் சோதியந்தீங்

குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்

பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே. 5

 

 

உறுங்கண்ணி வந்த கணையுர வோன்பொடி யாயொடுங்கத்

தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய்

நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென் வாணுதல் நாகத்தொண்பூங்

குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள் நாணுமிக் குன்றிடத்தே. 6

 

 

நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி

மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா

குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ

நிறமனை வேங்கை யதளம் பலவன் நெடுவரையே. 7

 

 

கற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்

பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்

றுற்றில ளுற்ற தறிந்தில ளாகத் தொளிமிளுரும்

புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. 8

 

 

முனிதரு மன்னையு மென்னையர்சாலவும் மூர்க்கரின்னே

தனிதரு மிந்நிலத் தன்றைய குன்றமுந் தாழ்சடைமேற்

பனிதரு திங்க ளணியம் பலவர் பகைசெகுக்குங்

குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. 9

 

 

அந்தியின் வாயெழி லம்பலத் தெம்பரன் அம்பொன்வெற்பிற்

பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னோடுங்கடுவன்

மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப மனங்கனிய

முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. 10

 

 

தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்

கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்

பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச்

சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமியெந் தேமொழியே. 11

 

 

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை

மலையொன்று மாமுகத் தெம்மையர் எய்கணை மண்குளிக்குங்

கலையொன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்

கொலையொன்று திண்ணிய வாறையர்கையிற் கொடுஞ்சிலையே. 12

 

 

மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே

மெய்த்தழை யாநின்ற வன்பினர் போல விதிர்விதிர்த்துக்

கைத்தழை யேந்திக் கடமா வினாய்க்கையில் வில்லின்றியே

பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே. 13

 

 

அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே

ஒக்கு மிவள தொளிருரு வஞ்சிமஞ் சார்சிலம்பா

கொக்குஞ் சுனையுங் குளிர்தளி ருங்கொழும் போதுகளும்

இக்குன்றி லென்றும் மலர்ந்தறி யாத வியல்பினவே. 14

 

 

உருகு தலைச்சென்ற வுள்ளத்தும் அம்பலத் தும்மொளியே

பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்

முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா

ஒருகு தலைச்சின் மழலைக்கென் னோவைய வோதுவதே. 15

 

 

பண்டா லியலு மிலைவளர் பாலகன் பார்கிழித்துத்

தொண்டா லியலுஞ்சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்

வண்டா லியலும் வளர்பூந் துறைவ மறைக்கினென்னைக்

கண்டா லியலுங் கடனில்லை கொல்லோ கருதியதே. 16

 

 

மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந் தூறமுதே

ஒத்தகஞ் சேர்ந்தென்னையுய்ய நின்றோன் தில்லையொத்திலங்கும்

முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந் தோளி முகமதியின்

வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன் றோஎன்விழுத்துணையே. 17

 

 

விண்ணிறந் தார்நிலம் விண்டவ ரென்றுமிக் காரிருவர்

கண்ணிறந் தார்தில்லை யம்பலத் தார்கழுக் குன்றினின்று

தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்

எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. 18

 

 

குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்

கவவின வாணகை வெண்முத்தங் கண்மலர் செங்கழுநீர்

தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற் சிற்றம் பலமனையாட்

குவவின நாண்மதி போன்றொளிர் கின்ற தொளிமுகமே. 19

 

 

ஈசற் கியான்வைத்த வன்பி னகன்றவன் வாங்கியவென்

பாசத்திற்காரென் றவன்தில்லை யின்னொளி போன்றவன்தோள்

பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம்

பேசத் திருவார்த்தை யிற்பெருநீளம் பெருங்கண்களே. 20

 

 

தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு மில்லின்தொன்மைக்

கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப

மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையிற்

கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே. 21

 

 

கழைகாண் டலுஞ்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்

தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பனின் றம்பலத்தான்

உழைகாண் டலும்நினைப்பாகு மென்நோக்கி மன்நோக்கங் கண்டால்

இழைகாண் பணைமுலை யாயறி யேன்சொல்லும் ஈடவற்கே. 22

 

 

தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்

அவளத்த னாம்மக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந்

துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. 23

 

 

ஏறும் பழிதழை யேன்பின்மற் றேலா விடின்மடன்மா

ஏறு மவனிட பங்கொடி யேற்றிவந் தம்பலத்துள்

ஏறு மரன்மன்னும் ஈங்கோய் மலைநம் மிரும்புனம்காய்ந்

தேறு மலைதொலைத் தாற்கென்னை யாஞ்செய்வ தேந்திழையே. 24

 

 

தெவ்வரை மெய்யெரிகாய் சிலையாண்டென்னை யாண்டு கொண்ட

செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை

அவ்வரை மேலன்றி யில்லைகண் டாயுள்ள வாறருளான்

இவ்வரை மேற்சிலம் பன்னெளி திற்றந்த ஈர்ந்தழையே. 25

 

 

பாசத் தளையறுத் தாண்டு கொண்டோன்தில்லை யம்பலஞ்சூழ்

தேசத் தனசெம்மல் நீதந் தனசென் றியான்கொடுத்தேன்

பேசிற் பெருகுஞ் சுருங்கு மருங்குல் பெயர்ந்தரைத்துப்

பூசிற் றிலளன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே. 26

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
View Details
பசுமடத்துக் கோனார்ச் சித்தர்
View Details