அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற்றாங்கெழில் காட்டுமொர்கார்ப் பொழிலே. 1
புயல்வள ரூசல்முன்ஆடிப் பொன்னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத் தான்வரைத் தண்புனத்தே. 2
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணியம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே. 3
நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. 4
படமா சுணப்பள்ளி யிக்குவடாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே. 5
தொத்தீன்மலர்ப்பொழில் தில்லைத் தொல்லோனரு ளன்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏரளப்பான்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலைகா ளென்னுக் கின்னும் பெருக்கின்றதே. 6
அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே. 7
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே. 8
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லமெழில் தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ் பொழி லாயத்துச் சேர்க திருத்தகவே. 9
பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
இன்னனயான் கொணர்ந்தேன் மணந்தாழ்குழற் கேய்வனவே. 10
அறுகால் நிறைமல ரைம்பால் நிறையணிந் தேன்அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே. 11
தழங்கு மருவியெஞ் சீறூர் பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடி தென்தில்லை மணிநகர்க்கே. 12
தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. 13
மாடஞ்செய பொன்னக ரும்நிக ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. 14
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங் காவலித் தாழ்வரையே. 15
மன்னுந் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதி ரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன் பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே. 16
பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகம்
தனித்துண் டவன்தொழுந் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்
றினிக் கண் டிலம்பற்றுச் சிற்றிடைக் கென்றஞ்சு மெம்மனையே. 17
ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை யாடிதிருமலைக்கே. 18
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. 19
வழியும் அதுவன்னை யென்னின் மகிழ்வும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றம்முன் னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல வென்னோ கிளக்கின்றதே. 20
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது போலு முருவினதே. 21
உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன் னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென்னோவினை யேன்யான் புகல்வதுவே. 22
மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே. 23
வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும் வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம் பெருமஇத் தண்புனமே. 24
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத் திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. 25
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே. 26
வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே. 27
பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புனமே. 28
பரிவுசெய் தாண்டம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங் கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று காட்டு மிளங்கிளியே. 29
கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண் டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலைமயில்காள் அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே. 30
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புனமே. 31
ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. 32
திருச்சிற்றம்பலம்