எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

024 பொருள்வயிற்பிரிவு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்

பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய்

துனிவரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்தளிப்ப

நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே. 1

 

 

வறியா ரிருமை யறியா ரெனமன்னும் மாநிதிக்கு

நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்

அறியா வளவுநின் றோன்தில்லைச் சிற்றம் பலமனைய

செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே. 2

 

 

சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ் சின்னப் படுங்குவளைக்

கெறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே

அறிவாள் ஒழுகுவ தஞ்சனம் அம்பல வர்ப்பணியார்

குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென் றம்ம கொடியவளே. 3

 

 

வானக் கடிமதில் தில்லையெங் கூத்தனை ஏத்தலர்போற்

கானக் கடஞ்செல்வர் காதல ரென்னக் கதிர்முலைகள்

மானக் கனகந் தருமலர்க் கண்கள்முத் தம்வளர்க்குந்

தேனக்க தார்மன்ன னென்னோ இனிச்சென்று தேர்பொருளே. 4

 

 

சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத்

திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த

அருடரு மின்சொற்க ளத்தனை யும்மறந் தத்தஞ்சென்றோ

பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. 5

 

 

மூவர்நின் றேத்த முதல்வன் ஆடமுப் பத்துமும்மைத்

தேவர்சென் றேத்துஞ் சிவன்தில்லை யம்பலஞ் சீர்வழுத்தாப்

பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான்

போவர்நங் காதல ரென்நாம் உரைப்பது பூங்கொடியே. 6

 

 

தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்

என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்

பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே

வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. 7

 

 

ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன்

ஊழியொன் றாதன நான்குமைம் பூதமும் ஆறொடுங்கும்

ஏழியன் றாழ்கடலும் மெண்டிசையுந் திரிந்தி ளைத்து

வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. 8

 

 

பிரியா ரெனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்

தரியா ளெனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க

எரியா ரெழிலழிக் கும்எழி லம்பலத் தோனெவர்க்கும்

அரியா னருளிலர் போலன்ன என்னை யழிவித்தவே. 9

 

 

சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்

சூணுந் திருத்து மொருவன் திருத்தும் உலகினெல்லாங்

காணுந் திசைதொறுங் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம்

பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. 10

 

 

பொன்னணி யீட்டிய ஒட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா

னின்னணி நிற்குமி தென்னென்ப தேஇமை யோரிறைஞ்சும்

மன்னணி தில்லை வளநக ரன்னஅன் னந்நடையாள்

மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. 11

 

 

நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற் றொண்டுகொண்ட

தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப்

பேய்வயி னும்மரி தாகும் பிரிவெளி தாக்குவித்துச்

சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே. 12

 

 

தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய

பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான்

நாமே நடக்க வொழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன

வாமே கலையைவிட் டோபொருள்தேர்ந் தெம்மை வாழ்விப்பதே. 13

 

 

தெண்ணீ ரணிசிவன் சிற்றம் பலஞ்சிந்தி யாதவரிற்

பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்க

ணுண்ணீர் உகவொளி வாடிட நீடுசென் றார்சென்றநாள்

எண்ணீர் மையின்நில னுங்குழி யும்விர லிட்டறவே. 14

 

 

சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்

சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்

புற்றங் குதர்ந்துநன் னாகொடும் பொன்னார் மணிபுலம்பக்

கொற்றம் மருவுகொல் லேறுசெல் லாநின்ற கூர்ஞ்செக்கரே.  15

 

 

கண்ணுழை யாதுவிண் மேகங் கலந்துகண மயில்தொக்

கெண்ணுழை யாத்தழை கோலிநின் றாலுமின மலர்வாய்

மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன தின்னருள்போற்

பண்ணுழை யாமொழி யாளென்ன ளாங்கொல்மன் பாவியற்கே. 16

 

 

அற்படு காட்டில்நின் றாடிசிற் றம்பலத் தான்மிடற்றின்

முற்படு நீள்முகி லென்னின்முன் னேல்முது வோர்குழுமி 

விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய்

நெற்படு வான்பலி செய்தய ராநிற்கும் நீள்நகர்க்கே. 17

 

 

பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்

ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தி னம்பலத்துக்

காவியை வெல்லும் மிடற்றோ னருளிற் கதுமெனப்போய்

மேவிய மாநிதி யோடன்பர் தேர்வந்து மேவினதே. 18

 

 

யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தானமைத்த

ஊழின் வலியதொன் றென்னை ஒளிமே கலையுகளும்

வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்னே

சூழுந் தொகுநிதி யோடன்பர் தேர்வந்து தோன்றியதே. 19

 

 

மயின்மன்னு சாயலிம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்

வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல் லாம்விடை யோன்புலியூர்க்

குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென் அங்கத் திடைகுளிப்பத்

துயின்மன்னு பூவணை மேலணை யாமுன் துவளுற்றதே.  20

 

திருச்சிற்றம்பலம்