ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

001 ஒளிவளர் விளக்கே

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !

  உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

  சித்தத்துள் தித்திக்கும் தேனே !

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !

  அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்

  தொண்டனேன் விளம்புமா விளம்பே.  1 

 

 

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்

  இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த

சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்

  தூயநற் சோதியுள் சோதீ !

அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !

  அயனொடு மாலறி யாமைப்

படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்

  தொண்டனேன் பணியுமா பணியே.  2 

 

 

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !

  சாமகண்டா ! அண்ட வாணா !

நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை

  என்னுடை நாவினால் நவில்வான்

அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்

  தந்தபொன் அம்பலத்து ஆடி !

கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்

  தொண்டனேன் கருதுமா கருதே.  3 

 

 

பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்

  பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !

கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்

  மகள்உமை யவள்களை கண்ணே !

அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்

  அப்பனே அம்பலத்து அமுதே

ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்

  தொண்டனேன் உரைக்குமாறு உரையே.  4 

 

 

கோலமே மேலை வானவர் கோவே !

  குணங்குறி இறந்ததோர் குணமே !

காலமே கங்கை நாயகா எங்கள்

  காலகாலா! காம நாசா !

ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்

  கோயில்கொண்டு ஆடவல் லானே !

ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்

  தொண்டனேன் நணுகுமா நணுகே.  5 

 

 

நீறணி பவளக் குன்றமே ! நின்ற

  நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !

வேறணி புவன போகமே யோக

  வெள்ளமே மேருவில் வீரா !

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா

  அம்பொன்செய் அம்பலத் தரசே !

ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்

  தொண்டனேன் இசையுமாறு இசையே.  6 

 

 

தனதன்நல் தோழா சங்கரா ! சூல

  பாணியே! தாணுவே சிவனே !

கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே

  கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !

அனகனே குமர விநாயக சனக

  அம்பலத்து அமரசே கரனே !

நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்

  தொண்டனேன் நுகருமா நுகரே.  7 

 

 

திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே

  திகைக்கின்றேன் தனைத்திகை யாமே

நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்

  நிகழ்வித்த நிகரிலா மணியே !

அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய்

  ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !

புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்

  தொண்டனேன் புணருமா புணரே.  8 

 

 

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்

  தாமரை நான்முகன் தலையும்

ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்

  நெறித்தரு ளியவுருத் திரனே !

அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட

  ஆடப்பொன் னம்பலத்து ஆடும்

சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்

  தொண்டனேன் தொடருமா தொடரே.  9 

 

 

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு

  அருள்புரி வள்ளலே ! மருளார்

இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்

  ஏறிய ஏறுசே வகனே !

அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்

  அடர்த்தபொன் னம்பலத் தரசே !

விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்

  தொண்டனேன் விரும்புமா விரும்பே.  10 

 

 

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது

  அயன்திரு மாலொடு மயங்கி

முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை

  மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்

அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்

  சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்

நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்

  தொண்டனேன் நினையுமா நினையே. 11

 

திருச்சிற்றம்பலம்