ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

019 முத்து வயிரமணி

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

முத்து வயிரமணி 

  மாணிக்க மாலைகண்மேல்

தொத்து மிளிர்வனபோல் 

  தூண்டு விளக்கேய்ப்ப

எத்திசையும் வானவர்கள் 

  ஏத்தும் எழில்தில்லை

அத்தனுக்கும் அம்பலமே 

  ஆடரங்கம் ஆயிற்றே.  1 

 

 

கடியார் கணம்புல்லர் 

  கண்ணப்பர் என்றுன்

அடியார் அமருலகம் 

  ஆளநீ ஆளாதே

முடியாமுத் தீவேள்வி 

  மூவாயி ரவரொடும்

குடிவாழ்க்கை கொண்டுநீ 

  குலாவிக் கூத் தாடினையே.  2 

 

 

அல்லியம் பூம்பழனத்(து) 

  ஆமூர்நா வுக்கரசைச்

செல்ல நெறிவகுத்த 

  சேவகனே ! தென்தில்லைக்

கொல்லை விடையேறி 

  கூத்தா(டு) அரங்காகச்

செல்வம் நிறைந்தசிற் 

  றம்பலமே சேர்ந்தனையே.  3 

 

 

எம்பந்த வல்வினை நோய் 

  தீர்த்திட்(டு) எமையாளும்

சம்பந்தன் காழியர்கோன் 

  தன்னையும் ஆட் கொண்டருளி

அம்புந்து கண்ணாளும் 

  தானும் அணிதில்லைச்

செம்பொன்செய் அம்பலமே 

  சேர்ந்திருக்கை ஆயிற்றே.  4 

 

 

களையா உடலோடு 

  சேரமான் ஆருரன்

விளையா மதமாறா 

  வெள்ளானை மேல்கொள்ள

முளையா மதிசூடி 

  மூவா யிரவரொடும்

அளையா விளையாடும் 

  அம்பலம்நின் ஆடரங்கே.  5 

 

 

அகலோக மெல்லாம் 

  அடியவர்கள் தற்சூழப்

புகலோகம் உண்டென்று 

  புகுமிடம்நீ தேடாதே

புவலோக நெறிபடைத்த 

  புண்ணியங்கள் நண்ணியசீர்ச்

சிவலோகம் ஆவதுவும் 

  தில்லைச் சிற் றம்பலமே.  6 

 

 

களகமணி மாடம் 

  சூளிகைசூழ் மாளிகைமேல்

அளகமதி நுதலார் 

  ஆயிழையார் போற்றிசைப்ப

ஒளிகொண்ட மாமணிகள் 

  ஓங்கிருளை ஆங்ககற்றும்

தெளிகொண்ட தில்லைச் 

  சிற் றம்பலமே சேர்ந்தனையே.  7 

 

 

பாடகமும் நூபுரமும் 

  பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்

சூடகக்கை நல்லார் 

  தொழுதேத்தத் தொல்லுலகில்

நாடகத்தின் கூத்தை 

  நவிற்றுமவர் நாடோறும்

ஆடகத்தால் மேய்ந்தமைந்த 

  அம்பலம்நின் ஆடரங்கே.  8 

 

 

உருவத்(து) எரியுருவாய் 

  ஊழிதோ றெத்தனையும்

பரவிக் கிடந்தயனும் 

  மாலும் பணிந்தேத்த

இரவிக்கு நேராகி 

  ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)

அரவிக்கும் அம்பலமே 

  ஆடரங்கம் ஆயிற்றே.  9 

 

 

சேடர் உறைதில்லைச் 

  சிற்றம் பலத்தான்தன்

ஆடல் அதிசயத்தை 

  ஆங்கறித்து பூந்துருத்திக்

காடன் தமிழ் மாலை 

  பத்தும் கருத்தறிந்து

பாடும் இவைவல்லார் 

  பற்றுநிலை பற்றுவரே.  10 

 

திருச்சிற்றம்பலம்