ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

021 துச்சான செய்திடினும்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

துச்சான செய்திடினும் 

  பொறுப்பரன்றே ஆளுகப்பார்

கைச்சாலும் சிறுகதலி 

  இலைவேம்பும் கறிகொள்வார்

எச்சார்வும் இல்லாமை 

  நீயறிந்தும் எனதுபணி

நச்சாய்காண்; திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே!  1 

 

 

தம்பானை சாய்ப்பற்றார் 

  என்னும் முதுசொல்லும்

எம்போல்வார்க்(கு) இல்லாமை 

  என்னளவே அறிந்தொழிந்தேன்

வம்பானார் பணிஉகத்தி 

  வழியடியேன் தொழிலிறையும்

நம்பாய்காண் திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே !  2 

 

 

பொசியாதோ கீழ்க்கொம்பு 

  நிறைகுளம்என் றதுபோலத்

திசைநோக்கிப் பேழ்கணித்துச் 

  சிவபெருமான் ஓஎனினும்

இசையானால் என்திறத்தும் 

  எனையுடையாள் உரையாடாள்

நசையானேன் திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே !  3 

 

 

ஆயாத சமயங்கள் 

  அவரவர்கள் முன்பென்னை

நோயோடு பிணிநலிய 

  இருக்கின்ற அதனாலே

பேயாஇத் தொழும்பனைத்தம் 

  பிரான்இகழும் என்பித்தாய்

நாயேனைத் திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே.  4 

 

 

நின்றுநினைந்(து) இருந்துகிடந்து 

  எழுந்துதொழும் தொழும்பனேன்

ஒன்றிஒரு கால்நினையா(து) 

  இருந்தாலும் இருக்கவொட்டாய்

கன்றுபிரி கற்றாப்போல் 

  கதறுவித்தி வரவுநில்லாய்

நன்றிதுவோ திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே.  5 

 

 

படுமதமும் மிடவயிறும் 

  உடையகளி றுடையபிரான்

அடியறிய உணர்த்துவதும் 

  அகத்தியனுக்(கு) ஓத்தன்றே

இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) 

  ஒன்றினுக்கு வையிடுதல்

நடுஇதுவோ திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே.  6 

 

 

மண்ணோடு விண்ணளவும் 

  மனிதரொடு வானவர்க்கும்

கண்ணாவாய் கண்ணாகா(து) 

  ஒழிதலும்நான் மிகக்கலங்கி

அண்ணாவோ என்றண்ணாந்(து) 

  அலமந்து விளித்தாலும்

நண்ணாயால் திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே.  7 

 

 

வாடாவாய் நாப்பிதற்றி 

  உனைநினைந்து நெஞ்சுருகி

வீடாஞ்செய் குற்றேவல் 

  எற்றேமற் றிதுபொய்யில்

கூடாமே கைவந்து 

  குறுகுமா(று) யான்உன்னை

நாடாயால் திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே.  8 

 

 

வாளாமால் அயன்வீழ்ந்து 

  காண்பரிய மாண்பிதனைத்

தோளாரக் கையாரத் 

  துணையாரத் தொழுதாலும்

ஆளோநீ உடையதுவும் 

  அடியேன்உன் தாள்சேரும்

நாளேதோ திருத்தில்லை 

  நடம்பயிலும் நம்பானே.  9 

 

 

பாவார்ந்த தமிழ்மாலை 

  பத்தரடித் தொண்டனெடுத்(து)

ஓவாதே அழைக்கின்றான் 

  என்றருளின் நன்றுமிகத்

தேவேதென் திருத்தில்லைக் 

  கூத்தாடீ நாயடியேன்

சாவாயும் நினைக்காண்டல் 

  இனியுனக்குத் தடுப்பரிதே.  10 

 

திருச்சிற்றம்பலம்