பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 11. அக்கினி காரியம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்

திசையும் திசைபெறு தேவர் குழாமும்

விசையும் பெருகிய வேத முதலாம்

அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.  1 

 

 

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்

போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்

தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி

தாமறி வாலே தலைப்பட்ட வாறே.  2 

 

 

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி

அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான

இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது

துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.  3 

 

 

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு

மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்

தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்

வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  4 

 

 

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று

மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு

மைநின்று அவிழ்தரு மந்திரமும் என்றும்

செய்நின்ற செல்வமும் தீயது வாமே.  5 

 

 

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு

ஊழி அகலும் உறுவினை நோய்பல

வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்

வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.  6 

 

 

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த

தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்

வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந் தெண்ணி

அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.  7 

 

 

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை

ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற

கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்

தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.  8 

 

 

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை

ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்

வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்

கோமத்துள் அங்கி குரைகடல் தானே.  9 

 

 

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து

தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்

எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி

பொங்கி நிறுத்தும் புகழது வாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்