பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 23. நடுவு நிலைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை

நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்

நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.  1 

 

 

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்

நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி

நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவோர்

நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.  2 

 

 

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்

நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்

நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்

நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.  3 

 

 

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி

ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி

மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை

நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.  4

 

திருச்சிற்றம்பலம்