பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 17. அபாத்திரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்

பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்

சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது

காலங் கழிந்த பயிரது ஆகுமே.  1 

 

 

ஈவது யோக இயம நியமங்கள்

சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி

ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு

ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.  2 

 

 

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்

தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்

காமாதி விட்டோ ர்க்குந் தூடணம் கற்பிப்போன்

போமா நரகில் புகான்போதங் கற்கவே.  3 

 

 

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்

அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்

எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்

நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.  4 

திருச்சிற்றம்பலம்