பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 10. அட்டாங்கயோகப் பேறு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

போதுகந் தேறும் புரிசடை யானடி

யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்

ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு

மாதுகந் தாடிடு மால்விடை யோனே  1 

 

 

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்

கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு

முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்

தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே  2 

 

 

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்

திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்

தருந்தண் முழவங் குழலும் இயம்ப

இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே  3 

 

 

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்

கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள

எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல

இன்பக் கலவி இருக்கலு மாமே  4 

 

 

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்

ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன

ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்

காருறு கண்டனை மெய்கண்ட வாறே  5 

 

 

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்

சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை

இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்

பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே  6 

 

 

தூங்க வல் லார்க்கும் துணையேழ் புவனமும்

வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடுந்

தேங்க வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந்

தாங்கவல் லார்க்குந் தன்தன்னிட மாமே 7

 

 

காரிய மான உபாதியைத் தாங்கடந்

தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற

ஆரிய காரண மாய தவத்திடைத்

தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details
கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details
சட்டை முனி
View Details