பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்

ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங்

காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்

நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.  1 

 

 

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்

கோடற வீதியுங் கொணர்ந்துள் இரண்டழி

பாடறி பத்துடன் ஆறு நடுவீதி

எடற நாலைந் திடவகை யாமே.  2 

 

 

நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம்

நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்

நாலுநற் கோணமும் நந்நா லிலிங்கமாய்

நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே.  3 

 

 

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்

வேறுரு வாக விளைந்து கிடந்தது

தேறி நிருமல சிவாய நமவென்று

கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.  4 

 

 

குறைவதும் இல்லை குரைகழற் கூடு

மறைவது மாரண மவ்வெழுத் தாகித்

திறமது வாகத் தெளியவல் லார்க்கு

இறவில்லை என்றென் றியம்பினர் காணே.  5 

 

 

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்

பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்

ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்

காணுங் கனகமுங் காரிகை யாமே.  6 

 

 

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்

போமே யதுதானும் போம்வழி யேபோனால்

நாமே நினைத்தன செய்யலு மாகும்

பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.  7 

 

 

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்

நகையில்லை நாணாளும் நண்மைக ளாகும்

வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை

தகையில்லை தானுஞ் சலமது வாமே.  8 

 

 

ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே

யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்

பாரும் விசும்பும் பகலும் மதியதி

ஊனும் உயிரும் உணர்வது வாமே.  9 

 

 

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே

அணைந்தெழு மாங்கத னாதிய தாகுங்

குணர்ந்தெழு சூதனுஞ் சூதியங் கூடிக்

கணந் தெழுங் காணுமக் காமுகை யாலே.  10 

 

திருச்சிற்றம்பலம்