வாமன அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் பலி என்ற அசுரன் தாக்கப்பட்டான்.

மற்ற அசுரர்கள் அவனை உயிர் பிழைக்கச் செய்தார்கள். அசுர வம்சத்து முனிவர்களும், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியரும் அவனுக்குப் பழைய தேக பலத்தையும், சக்தியையும் அளித்தார்கள்.

அவனைப் பெரிய யாகம் ஒன்று செய்ய வைத்தார்கள். அந்த யாகத்திலிருந்து இரதம் ஒன்று வெளியே வர, அதன் மீதேறித் தேவ லோகம் சென்ற பலி, இந்திரனை விரட்டியடித்து தேவலோகத்தை கைப்பற்றினான். மகாபலி என்ற பெயருடன் சக்கரவர்த்தி ஆகினான்.

மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆட்சி மூன்று லோகங்களிலும் பரவியது. தேவர்கள் தேவலோகத்தைவிட்டு ஓடி மறைந்தார்கள்.

இதை அறிந்த தேவமாத அதிதி வேதனையுற்று கணவர் காசிபரிடம் முறையிட, அவர், விஷ்ணுவை நினைத்து விரதமிருக்கும்படி கூறினார். அவளும் பன்னிரண்டு நாட்கள் கடுமையான விரதமிருந்தாள்.

மகாவிஷ்ணு காட்சியளித்து, " தேவமாதாவே, மகாபலிச் சக்கரவர்த்தி பிராமணர்கள் செய்த யாகத்தினால் வலிமையடைந்திருக்கிறான். அதனால், அவனிடமிருந்து தேவலோகத்தை மீட்க, உனக்குப் புத்திரனாக நானே அவதரிப்பேன்." என்று அருளினார். அதன் படியே, அதிதியின் கருவில், வாமனமூர்த்தியாக அவதரித்தார், மகாவிஷ்ணு.

வாமனமூர்த்தி தம் குள்ளமான உடலுடன் மகாபலிச் சக்கரவர்த்தியின் அசுவமேத யாக சாலைககுச் சென்றார். மகாபலி அவரை வரவேற்று, உபசரித்து, உட்காரவைத்து அவருடைய பாதங்களைக் கழுவினான்.

கழுவிய நீரைத் தன தலைமேல் தெளித்துக் கொண்டான்.

பின் அவரிடம், தன்னை நாடி வந்த நோக்கம் என்ன என்று கேட்டான். எதுவாக இருந்தாலும் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தான்.

"மகாபலியே, கேட்பது எதுவாக இருந்தாலும் கொடுப்பதாக வாக்களித்து விட்டாய். எனக்கு வேண்டியது, என் கால்களால் அளந்த மூன்று அடி மண்தான். அதைக்கொடு " என்று கேட்டார்.

அதைக்கேட்ட மகாபலி மகிழ்ச்சியுடன், " மூன்று லோகங்களையோ, ஓர் இராஜ்யத்தையோ கேட்காமல், மூன்றடி நிலம் கேட்கிறீர்கள். அப்படியே தருகிறேன் " என்று கூறினான்.

அச் சமயத்தில் சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, " குள்ளமான உருவத்தில் வந்திருப்பது உன் குலவிரோதி மகாவிஷ்ணுதான் "என்று கூற, மகாபலி பதிலாக," என் குலவிரோதியானாலும், நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் " என்று கூறிவிட்டுத் தன மனைவி கொண்டுவந்த நீர் நிரம்பிய கெண்டியிலிருந்து தண்ணீரை ஊற்றி தாரை வார்க்க முயன்றார்.

உடனே சுக்கிராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, தண்ணீர் வெளியே வராமல் கெண்டியின் துவாரத்தை அடைத்து நின்றார்.

இதையறிந்த வாமனர், தன கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் துவாரத்தைக் குத்த, வண்டு ஒரு கண்ணை இழந்தது.

இதனால் சுக்கிராச்சாரியார் ஒற்றைக்கண் உடையவர் ஆனார். மகாபலி, கெண்டியிலிருந்து நீரைத் தாரை வார்த்துத் தானம் கொடுத்தவுடன், வாமனரின் உருவம் வளர்ந்தது, மிகவும் வளர்ந்து பிரம்மாண்டமானது. மகாபலி அவரை அண்ணாந்து பார்த்தான்.

வாமனர் வானத்தை ஓர் அடியாலும், நிலத்தை மறு அடியாலும் அளந்தார். பின், " ஓர் அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து விட்டேன்.மூன்றாவது அடியை எங்கே வைப்பது? " என்று கேட்டார்.

மகாபலி சற்றும் தயங்காமல், " ஸ்ரீ விஷ்ணுவே, தங்கள் மூன்றாவது அடியை என் தலைமேல் வையுங்கள் " என்று கூறித் தலை சாய்ந்து, வணங்கி நின்றார்.

மகாவிஷ்ணு தமது ஒரு பாதத்தை அவன் தலைமீது வைத்து அழுத்த, மகாபலியும், அவனைச் சேர்ந்த அசுரர்களும் பாதாள லோகத்தை அடைந்தார்கள்.

பிரம்மனும், பிரகலாதனும், மகாபலிககுத் துன்பம் நேராதவாறு காக்கும்படி மகா விஷ்ணுவை வேண்ட, "வரப்போகும் சாவர்ணி மனுயுகத்தில் மகாபலி இந்திரபதவியை அடைவான். அதுவரை, அவனை நானே காத்து வருவேன் " என்று கூறி, அனைவர்க்கும் அருள் புரிந்தார்....

இது தான் பெருமாளின் 5 வது அவதாரமான வாமன அவதாரம் பற்றியது...

மேலும்

சமணர் ஏவிய யானை வதம்
View Details
திருநீலகண்ட நாயனார்
View Details
மூர்க்க நாயனார்
View Details
மதுரை நகர் அமைத்தல்
View Details
மெய்ப்பொருள் நாயனார்
View Details
விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
View Details