முதல்-திருமுறை

091 சித்தந் தெளிவீர்காள்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : திருவிருக்குக்குறள்

திருச்சிற்றம்பலம்

 

சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்

பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.  1 

 

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை

மறவா தேத்துமின், துறவி யாகுமே.  2 

 

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்

நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.  3 

 

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்

கையி னால்தொழ, நையும் வினைதானே.  4 

 

பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்

கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே.  5 

 

பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்

வாச மலர்தூவ, நேச மாகுமே.  6 

 

வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்

செய்ய மலர்தூவ, வையம் உமதாமே.  7 

 

அரக்கன் ஆண்மையை, நெருக்கி னான்ஆரூர்

கரத்தி னால்தொழத், திருத்த மாகுமே.  8 

 

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை

உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.  9 

 

கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்

எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.  10 

 

சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன

பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 11

திருச்சிற்றம்பலம்