முதல்-திருமுறை

110 மருந்தவன் வானவர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  இடைமருதூர்

திருச்சிற்றம்பலம்

 

மருந்தவன் வானவர் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொ டிறவுமானான்

அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே.  1 

 

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்

கூற்றவன் கொல்புலித் தோலசைத்த

நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்

ஏற்றவன் வளநகர் இடைமருதே.  2 

 

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்

நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்

முடைதலை இடுபலி கொண்டுழல்வான்

இடைமரு தினிதுறை யெம்மிறையே.  3 

 

பணைமுலை உமையொரு பங்கனொன்னார்

துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்

கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற

இணையிலி வளநகர் இடைமருதே.  4 

 

பொழிலவன் புயலவன் புயலியக்குந்

தொழிலவன் துயரவன் துயரகற்றுங்

கழலவன் கரியுரி போர்த்துகந்த

எழிலவன் வளநகர் இடைமருதே.  5 

 

நிறையவன் புனலொடு மதியும்வைத்த

பொறையவன் புகழவன் புகழநின்ற

மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட

இறையவன் வளநகர் இடைமருதே.  6 

 

நனிவளர் மதியொடு நாகம்வைத்த

பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்

முனிவரொ டமரர்கள் முறைவணங்க

இனிதுறை வளநகர் இடைமருதே.  7 

 

தருக்கின அரக்கன தாளுந்தோளும்

நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்

றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்

எரித்தவன் வளநகர் இடைமருதே.  8 

 

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்

வரியர வணைமறி கடற்றுயின்ற

கரியவன் அலரவன் காண்பரிய

எரியவன் வளநகர் இடைமருதே.  9 

 

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன

புந்தியில் உரையவை பொருள்கொளாதே

அந்தணர் ஓத்தினொ டரவமோவா

எந்தைதன் வளநகர் இடைமருதே.  10 

 

இலைமலி பொழிலிடை மருதிறையை

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன

பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்

உலகுறு புகழினொ டோ ங்குவரே. 11 

 

திருச்சிற்றம்பலம்